கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த மூன்று நாள்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தொடக்கத்தில் பெரும்பான்மையான மாகாணங்களில் வெற்றி வாய்ப்பைக் குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபரான ட்ரம்ப் கைப்பற்றியிருந்தார். ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடன் கடும் சவால் அளித்துவந்தார். ஒரு கட்டத்தில் முக்கிய மாகாணங்களில் ஜனநாயக கட்சி வெற்றிபெற தொடங்கியது.
இழுபறி மாகாணங்களான பென்சில்வேனியா, மிச்சிகன் உள்ளிட்டவற்றில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். அவரது கார் சென்ற வழியில் குழுமியிருந்த பைடன் ஆதரவாளர்கள், “ஹே ஹே ஹே, குட் பை” எனப் பாடியபடி ட்ரம்ப்பை எள்ளி நகையாடினர். அதே வழியில் நின்றிருந்த அவரது ஆதரவாளர்கள், “வி லவ் ட்ரம்ப்!” எனக் கூறி அமெரிக்க கொடிகளை அசைத்தனர்.
முன்னதாக, ட்ரம்ப் தனது வர்ஜீனியா கோல்ஃப் கிளப்பிலிருந்து வெளியேறும்போது அவருடைய ஆதரவாளர்கள் அவரை உற்சாகப்படுத்தினர். ஆனால் பைடன் ஆதரவாளர்கள் அவர் வெள்ளைமாளிகைக்குள் செல்லும்போது, “லூசர், லூசர், லூசர்” எனக் கத்தியதோடு, நடுவிரலைக் காட்டி வரவேற்றனர்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாகுபாடின்றி அனைத்து மக்களுக்குமான அதிபராக செயல்படுவேன் - பைடன் உறுதி!