கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலகளவில் பல ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். தற்போது, கரோனா பாதித்த நோயாளிகளுக்குப் பல்வேறு கடுமையான நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை தான் மருத்துவ நிபுணர்கள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், மலேரியா நோய்க்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தான் பல இடங்களில் சிகிச்சைக்கு வழங்குகின்றனர்.
இந்நிலையில், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கரோனாவுக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளை சேகரிக்கும் ஆராய்ச்சியில் களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டேவிட் சி. ஃபஜ்கன்பாம் கூறுகையில், "ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சிகிச்சை முறையை கண்டறியாமல், புதிதாக வெற்றி கிடைக்கும் சிகிச்சையை தேடி மட்டும் ஓடிக்கொண்டிருந்தால், கண்டிப்பாக கரோனா சண்டையில் வெற்றிபெற முடியாது. உலகெங்கும் நடைபெறும் சிகிச்சை முறைகள் குறித்த தெளிவான விவரங்கள் யாருக்கும் தெரியாது. இதைக் கருத்தில் கொண்டே கரோனா சிகிச்சை முறைகள் அடங்கிய டேட்டாபேஸை உருவாக்க முடிவு செய்தோம்" என்றார்.
இவரின் மருத்துவக் குழுவினர், கரோனா சிகிச்சையை விவரிக்கும் வகையில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட சுமார் 2,700 ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்து, 9 ஆயிரத்து 152 நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சை முறைகளை கண்டறிந்தனர். இவை அனைத்தையும் வகை வகையாக தொகுத்து டேட்டாபேஸ் தயாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்புடன் உறவு துண்டிப்பு - ட்ரம்ப் அறிவிப்பு