ஸ்பூட்னிக் தடுப்பூசியைப் பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததன் மூலம், கரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைப் பதிவுசெய்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றது. இந்தத் தடுப்பூசிக்கு ரஷ்யாவின் முதல் செயற்கைக்கோளான ஸ்பூட்னிக் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசி கரோனாவிற்கு எதிராக 95 விழுக்காட்டிற்கு மேல் செயல்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், "ஐரோப்பாவில் காணப்படும் புதிய கரோனா வைரசிற்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்பூட்னிக் வி கரோனா வைரஸ் தடுப்பூசி உடலில் கலந்து செயல்படத் தொடங்க 42 நாள்கள் எடுக்கும். இந்த நாள்களில் மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்று ரஷ்ய துணைப் பிரதமர் கோலிகோவா கூறியுள்ளார்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு கோடியே 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 70 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.