2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளாரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று 45ஆவது அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ராபர்ட் முல்லா் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது. இது தொடர்பாக 22 மாதங்களாக நடைபெற்ற விசாரணை முடிந்ததையடுத்து அமெரிக்க அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ஃபுளோரிடாவில் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சட்ட விரோதமான விசாரணை தற்போது தோல்வியடைந்துள்ளதாகத்தெரிவித்தார்.
மேலும், ராபர்ட் முல்லா் தலைமையிலான விசாரணை குழு இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 500 பேரிடம் விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.