புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஜோ பைடனே கேட்டுக் கொண்டாலும் அவரது நிர்வாகத்தின்கீழ் தன்னுடைய தற்போதைய பதவியில் தொடர இனி தனக்கு விருப்பமில்லை என, நாசா தலைவர் ஜிம் பிரைடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
ஏரோஸ்பேஸ் டெய்லிக்கு அவர் அளித்த பேட்டியில், பைடன் தலைமையிலான அரசின்கீழ், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதே அமெரிக்க விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு நன்மை பயக்கும் எனவும் ஜிம் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க அதிபருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் ஒருவரே இந்தப் பதவியில் இருக்க வேண்டும். ஓ.எம்.பி எனப்படும் மேலாண்மை, பட்ஜெட் அலுவலகம் (Office of Management and Budget), தேசிய விண்வெளி கவுன்சில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட நிர்வாகங்களால் நம்பப்படும் ஒருவரே இப்பதவிக்குத் தேவை. நான் இந்தப் பதவிக்கு இனியும் பொருத்தமானவராக இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்” என ஜிம் பிரைடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, முன்னாள் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம் பிரிடென்ஸ்டைனின் பெயரை, நாசாவை வழிநடத்துவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்தார். அப்போது, அறிவியலாளர்கள் தவிர்த்து அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவர் அமெரிக்க விண்வெளி நிறுவனத்திற்கு தலைமை தாங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் 2018ஆம் ஆண்டு அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட வோட்டெடுப்பில் தேர்வான ஜிம் பிரைடென்ஸ்டைன், நாசா தலைவர் பதவியில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
வருகிற 2024ஆம் ஆண்டு ’ஆர்ட்டெமிஸ்’ (Artemis) எனும் திட்டத்தின்கீழ் மனிதர்களை நிலவுக்கு மீண்டும் அழைத்துச் செல்வதற்கு நாசா திட்டமிட்டுவிட்டு வரும் சூழலில், பைடெனின் நிர்வாகத்தின்கீழ் நாசா தலைராகத் தொடர தனக்கு விருப்பமில்லை என பிரைடென்ஸ்டைன் தெரிவித்திருக்கும் செய்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.