2017 ஆம் ஆண்டு மியான்மரில் ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக ரஹின் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு பத்திரிகையாளா்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ வெளிக்கொண்டு வந்தனர். மேலும், இது தொடர்பான அரசு ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அந்நாட்டு நீதிமன்றம், இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டணை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசை சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்காவின் புகழ்பெற்ற புலிட்சர் விருது, இந்தாண்டு ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிரான தாக்குதலை வெளிக்கொண்டு வந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் ஸ்டீஃபன் அட்லெர் கூறுகையில், " எங்களது சக ஊழியர்களான் வா லொன் மற்றும் க்யூ ஸோ-விற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், எங்களது வீரமிக்க செய்தியாளர்கள் சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது " என தெரிவித்தார்.
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இரண்டு பத்திரிகையாளர்களை வெளியே கொண்டுவர ராய்ட்டர்ஸ் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.