கோவிட்-19 தொற்று காரணமாக 190க்கும் மேற்பட்ட நாடுகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த கரோனா வைரஸ் ஒருவரின் இருமல், தும்மல் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் சிறு எச்சில் துகள்கள் மூலம் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் மூலம் இந்த வைரஸ் பரவாது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 239க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் காற்றின் மூலம் இந்த வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒருவர் தும்மும்போது வெளிப்படும் கரோனா வைரஸ் காற்றிலேயே நீண்ட நேரம் இருப்பதாகவும் அவ்வாறு காற்றின் வழியே மற்றவர்களுக்கு இந்த கரோனா பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு, தான் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆராய்ச்சியாளர்கள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் டாக்டர் பெனடெட்டா அலெக்ரான்ஸி கூறுகையில், "காற்றின் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரவும் என்ற அபாயம் உள்ளதா என்பது குறித்து கடந்த சில மாதங்களில் பல முறை ஆராய்ந்துள்ளோம். இருப்பினும், காற்றின் மூலம் கரோனா பரவும் என்பதற்கு திடமான மற்றும் தெளிவான ஆதாரங்கள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை உலகெங்கும் 1,15,80,092 போருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 5,37,179 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவை வெளிக்கொணர்ந்த கொலம்பஸின் சிலை தகர்ப்பு!