ஜெருசலேம்: தனது கரோனா தடுப்பூசிக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசியைப் பயன்படுத்த இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல்கட்டமாக இந்த மாதத்தில் சுமார் 60 லட்சம் டோஸ்கள் இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இஸ்ரேல் ஏற்கனவே அதன் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு முதியவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இஸ்ரேலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் (ஜன. 04) 8,308 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி 3,445 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலில் மூன்றாவது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.