உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்கா கரோனா தொற்று காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக, வரும் செமஸ்டரில் அனைத்துப் பாடங்களையும் ஆன்லைன் வழியாக நடத்த அந்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இதனால், எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை முற்றிலுமாக ஆன்லைனில் மாற்ற முடிவு செய்துள்ளனவோ, அந்த பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக, நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்று ட்ரம்ப் அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
ட்ரம்ப் அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு எதிராக எம்ஐடி, ஹார்வர்டு ஆகிய பல்கலைக்கழகங்கள் பாஸ்ட்னிலுள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இது குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத் தலைவர் லாரன்ஸ் பேக்கோ கூறுகையில், "இந்த உத்தரவு மோசமானது என்றே நாங்கள் கருதுகிறோம்.
மேலும், இந்த உத்தரவு சட்டத்திற்கு எதிரானது என்றும் நாங்கள் கருதுகிறோம். நாங்கள் இந்த வழக்கின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளோம். இதன் மூலம் அமெரிக்கா முழுவதும் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் அச்சமின்றி தங்கள் படிப்பைத் தொடரலாம்" என்றார்.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தொடரும்போதும், அங்கு இயல்புநிலை திரும்பிவிட்டதாகக் காட்ட அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி ஆன்லைனில் பாடங்களை நடத்த முடிவு செய்துள்ள பல்கலைக்கழகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், அந்த பல்கலைக்கழகங்களை மீண்டும் பழைய முறையில் இயங்க வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
வைரஸ் பாதிப்பு தொடரும் சூழ்நிலையில், மீண்டும் பழையபடி வகுப்புகளை நடத்துவது என்பது பெரும் அபாயத்தையே ஏற்படுத்தும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 31 லட்சத்து 58 ஆயிரத்து 932 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 862 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவுடன் அமெரிக்க ராணுவம் துணை நிற்கும் - வெள்ளை மாளிகை