சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மிட்செல் ஒபாமா, கரோனா காலகட்டத்தில் நேரத்தைக் கடத்த பின்னல் ஊசியை தான் பெரிதும் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். தனது கணவர் பராக் ஒபாமாவுக்காக ஸ்வெட்டர் ஒன்றைத் தயாரித்து வரும் மிட்செல், "பின்னல் கலையில் ஒருவர் மேம்பட்டவராக அவ்வளவு எளிதில் மாறிவிட முடியாது. ஏனென்றால் ஸ்கார்ப் செய்வதில் தேர்ந்தவராகி விட்டால் அடுத்ததாக விரிப்புகள் செய்ய அவர் தொடங்கிவிடுவார். அதில் மேம்பட்ட பின், தொப்பி, சாக்ஸ் என அவர் அடுத்தடுத்து வேறுபட்ட பொருள்களை தயாரிக்கத் தொடங்கி விடுவார்" என வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கரோனா காலகட்டம் தனது குழந்தைகள், கணவருடன் தான் இழந்த நிமிடங்களை மீட்டெடுக்க உதவியதாகத் தெரிவித்துள்ள மிட்செல், ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட், இனவெறித் தாக்குதால் கொல்லப்பட்டபோது தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதை நினைவுகூர்ந்தார்.
தற்போது 59 வயதை எட்டியுள்ள மிட்செல், அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தபோது, அவரது உடல் ஆரோக்கியத்தைப் பேணும் முறை, உடற்பயிற்சிகள் செய்யும் முறை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும் கவனம் ஈர்த்து லைக்ஸ் அள்ளினார். இந்நிலையில், இந்தக் கரோனா காலகட்டத்தில் தான் ஒரு நல்ல 'லேப்' எடுக்கும் நீச்சல் வீராங்கனையாக உருவெடுத்துள்ளதாக மிட்செல் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் பொது வாழ்வில் இருந்து தானும் பராக் ஒபாமாவும் விரைவில் ஓய்வு பெற விரும்புவதாகவும், அதன் பிறகு பராக் தன் விருப்பப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கோல்ஃப் விளையாடலாம் ஏனென்றால் அதைத் தவிர அவருக்கு அப்போது செய்வதற்கு எதுவும் இருக்காது என்றும் மிட்செல் குறும்பாகப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : முதல் முறையாக அமீரகம் செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்!