சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை பெரும்பாலான நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன. ஆனால், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவிலோ இது அரசியல் விவகாரமாக உருவெடுத்துள்ளது. கட்டாயமாக முகக் கவசம் அணியச் சொல்வது தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளதாக பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஃப்யூ ஆராய்ச்சி மையம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆளுங் குடியரசுக் கட்சியினரை விட எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரே முகக் கவசம் அணிய அதிகம் வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஜனநாயக கட்சியின் ஆளுநர்கள் தங்களது மாகாணங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளனர். முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து அக்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
அதே வேளையில், முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் குடியரசுக் கட்சியினரோ, பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
முகக் கவசம் குறித்த விவாதம் எப்போது தொடங்கியது ?
பொது ஊரடங்குக்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்களில், போராட்டக்காரர்கள் முகக் கவசம் அணியவில்லை. இதுவே இந்த விவாதத்துக்கு வித்திட்டது. கட்டாயமாக முகக் கவசம் அணியச் சொல்வது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுகாதார அமைப்புகள் கூறுவது என்ன?
மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பும், தொற்றுநோய் தடுப்பு மையமும் அறிவுறுத்தியுள்ளன. அமெரிக்க முன்னணி நோய்த் தடுப்பு மருத்துவர் ஆன்டோனி ஃபௌசி கூறுகையில், "அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது. இது முற்றிலும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரமாகும்" என்றார்.
டெக்ஸாஸ் மாகாணத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், அம்மாகாண ஆளுநர் கிரெக் அபோட் கூறுகையில், "முகக் கவசத்தை கட்டாயமாக அணியச் சொல்வது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும். ஆகையால் அதை கட்டாயமாக்கமாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க : தனியார்மயமாக்கலை நோக்கி செல்லும் ரயில்வேதுறை!