அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்ததில், காவல் துறை அதிகாரி ஒருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியலமைப்பின் 25வது சட்டத்திருத்தத்தின்கீழ் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்ட டொனால்ட் ட்ரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அதிபர் பதவியிலிருந்து ட்ரம்ப்பை நீக்கும் தீர்மானம் இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, ட்ரம்ப்பின் குடியரசு கட்சியினர் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிரதிநிதிகள் சபையைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து ட்ரம்ப்பை நீக்கும் தீர்மானம் செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும். ஆனால், ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஏழு நாள்களே உள்ள நிலையில், செனட் சபை கூட மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. இருப்பினும், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபருக்கு எதிராக இரண்டு முறை பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறையாகும்.