அமெரிக்காவில் அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைவதால், புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டபோதும், அவர்களை முறைப்படி அறிவிக்கும், அக்கட்சியின் நான்கு நாள் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.
முற்றிலும் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டின் இரண்டாவது நாளில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 77 வயதான ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் தனது பேச்சைத் தொடங்குவதற்கு முன் கமலா ஹாரிஸ் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும்விதமாக சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து கமலா ஹாரிஸ், "எனது தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸ் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவுடன் 19 வயதில் அமெரிக்கா வந்தார்.
இங்கு கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில், அவர் எனது தந்தை டொனால்ட் ஹாரிஸை சந்தித்தார் - அவர் ஜமைக்காவிலிருந்து பொருளாதாரம் படிக்க இங்கு வந்திருந்தார்.
எனக்கு ஐந்து வயது இருக்கும்போதே எனது பெற்றோர் பிரிந்துவிட்டனர். எனது தாயார் என்னையும் எனது சகோதரியையும் கஷ்டப்பட்டுவளர்த்தார். அவர் எங்களை பெருமை மற்றும் வலிமையான ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களாகவே வளர்த்தார். எங்கள் இந்திய பாரம்பரியம் குறித்த பெருமைகளை எடுத்துக்கூறியே அவர் எங்களை வளர்த்தார்.
குடும்பத்திற்கு முதலிடம் அளிக்க அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். பிறந்த குடும்பம், தேர்ந்தெடுக்கும் குடும்பம் என இரண்டும் இதில் அடங்கும். குடும்பம் என்றால் என் நண்பர்கள், என் மாமான்கள், என் அத்தைகள் என் சித்திகள் என்று அனைவரும் அடக்கம்" என்றார்.
தொடர்ந்து தனது தாயார் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், "கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள கைசர் மருத்துவமனையில் தனது 25ஆவது வயதில் என்னை பெற்றெடுக்கும்போது, தனது மகள் ஒரு கட்டத்தில் அமெரிக்க துணை அதிபர் தேர்தலுக்காக இதுபோல பேசிக்கொண்டிருப்பார் என்று ஒருபோதும் அவர் (ஷியாமலா கோபாலன்) நினைத்திருக்க மாட்டார்" என்றார்.
அமெரிக்க அதிபர், துணை அதிபர் தேர்தல்களில் அமெரிக்காவில் பிறக்கும் அந்நாட்டு குடிமகன்கள் மட்டுமே போட்டியிட முடியும். கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியானவுடனேயே, அவர் அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை என்ற தகவல் பரவத் தொடங்கியது.
அதை ஆதரிக்கும் வகையிலேயே அதிபர் ட்ரம்பும் தனது பரப்புரையில் பேசியிருந்தார். இவ்வாறு பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் ஓக்லாந்தில் உள்ள கைசர் மருத்துவமனையில் பிறந்ததாக அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார் கமலா ஹாரிஸ்.
தொடர்ந்து அதிபர் ட்ரம்பின் ஆட்சியை விமர்சித்துப் பேசிய கமலா, "பல ஆண்டுகளுக்குப் பிறகு நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் நம்மைப் பார்த்து, நாட்டில் இவ்வளவு பிரச்னை இருந்த காலத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்றும் இந்தச் சூழல் நமக்கு எப்படி இருந்தது என்றும் கேட்பார்கள்.
அப்போது நாம் அவர்களிடம் இந்தச் சூழல் எப்படி இருந்தது என்பதை மட்டுமின்றி நாம் இதைச் சரிசெய்ய என்ன செய்தோம் என்பதையும் பெருமையுடன் கூறலாம்" என்றார்.
இதையும் படிங்க: ஜோ பிடன் படையில் மற்றொரு இந்திய-அமெரிக்கர்...!