அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜாரெட் குஷ்னர் இன்னும் சில நாள்களில் சவுதி அரேபியா, கத்தார் நாடுகளுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் வெள்ளை மாளிகை தூதர் அவி பெர்கோவிட்ஸ், சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்தின் சிஇஓ ஆடம் போஹ்லர், ஈரான் முன்னாள் தூதர் பிரையன் ஹூக் ஆகியோரும் ஜாரெட் குஷ்னருடன் செல்லவுள்ளனர்.
கத்தார், சவுதி என இருநாட்டுத் தலைவர்களுடனும் ஜாரெட் குஷ்னருக்கு நல்லுறவு இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக அவர் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் (Axios news) வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "சவுதி அரேபியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான பிளவுகளைச் சரிசெய்யும் வகையிலும் வளைகுடா நாடுகளுக்கு இடையே ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலும் ஜாரெட் குஷ்னரின் இந்தப் பயணம் அமையவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படும்பட்சத்தில் குஷ்னருக்கும் சரி ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் சரி கடைசி நிமிட சாதனையாக இது இருக்கும். கத்தார் மற்றும் அதன் போட்டி நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய உறவைப் பேணுகிறது. இருப்பினும், இரு தரப்பையும் சமரசம் செய்ய ட்ரம்ப் அரசு எடுத்த பல முயற்சிகள் தோல்வியடைந்தன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் சவுதி இளவரசரைச் சந்திக்க சவுதி அரேபியாவுக்கு ரகசியமாகச் சென்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தச் சூழ்நிலையில் ட்ரம்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் சவுதிக்கும் செல்லவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் முக்கியத்துவம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு- பிரேசில் அதிபர்