பாலச்சந்திரன் பிரபாகரன் மரணம்:
ஈழத் தமிழர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பேரினவாத அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிங்கள பேரினவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கும்படி பல புகைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத ஒரு சிறுவனை சிங்கள பேரினவாத அரசு கொடூரமாக கொலை செய்தது தமிழ்நாட்டு மக்களைக் கொதித்தெழச் செய்தது.
ரோகிங்கியா இனப்படுகொலை:
மியான்மரில் ரோகிங்கியா இஸ்லாமியர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இதிலிருந்து கடல் வழியாக தப்பித்த ஹனிதா பேகம், கப்பல் கவிழ்ந்ததால் தன் பிஞ்சுக் குழந்தை அப்துல் மசூத்தை இழந்தார். உயிரிழந்த அப்துல் மசூத்தை ஹனிதா முத்தமிடும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.
வியட்நாம் போர்:
அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது வியட்நாம். தெற்கு வியட்நாமில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலின்போது தனது தீப்பற்றிய ஆடைகளைக் களைந்துவிட்டு ஓடிவந்தார் பான் தி கிம் புக் எனும் சிறுமி. இந்த புகைப்படம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்பிறகுதான், எந்த மாதிரியான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவர வேண்டும் என்பதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கவனம் செலுத்த ஆரம்பித்தது.
வியட்நாம் போரில் கறுப்பின மக்களை பகடைக்காயாய் பயன்படுத்திய அமெரிக்கா, அவர்களுக்கு இன்னும் சுதந்திரத்தை வழங்கவில்லை. இதுகுறித்து பிளாக் பேந்தர் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான பாபி சியல், சிவில் வார் நேரத்தில் இவர்களுடன் (அமெரிக்கர்கள்) 1 லட்சத்துக்கும் அதிகமான நம் கறுப்பின மக்கள் பங்கேற்றோம். நமக்கு சுதந்திரம் அளிப்பதாக கூறினார்கள். ஆனால் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.
இரண்டாம் உலகப் போரில் இவர்களுடன் 8 லட்சத்துக்கும் அதிகமான கறுப்பின மக்கள் பங்கேற்றோம். நமக்கு சுதந்திரம் அளிப்பதாக கூறினார்கள். அப்போதும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இப்போது வியட்நாம் போருக்காக இவர்களுடன் பங்கேற்கக் கிளம்பிருக்கிறோம். இப்போதும் எதுவும் கிடைக்கப் போவதில்லை... இந்த நிறவெறி பிடித்த காவலர்களின் கொடூர ஒடுக்குமுறையைத் தவிர என்கிறார். இதற்கு உதாரணமாக ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை எடுத்துக் கொள்ளலாம்.
சிரியா போர் - ஆலன் குர்தி மரணம்
சிரிய போரால் அகதிகளாய் வெளியேறிய ஆலன் குர்தியின் குடும்பம், துருக்கியின் போட்ரம் பகுதியிலிருந்து படகில் செல்லும்போது படகு கவிழ்ந்தது. இதில் ஆலன் குர்தி கடலில் மூழ்கி உயிரிழந்து கரை ஒதுங்கினான். துருக்கி பத்திரிகையாளர் நிலுஃபர் டெமிர் எடுத்த இப்புகைப்படம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உப்புச் சத்தியாகிரகம்:
தண்டி உப்புச் சத்தியாகிரகத்தின்போது கனு ராம்தாஸ் காந்தி ( காந்தியின் பேரன்), காந்தியின் கைத்தடியை பிடித்து அழைத்துச் செல்லும் புகைப்படம் மிகவும் பிரபலமானது. முன்னாள் நாசா விஞ்ஞானியான கனு ராம்தாஸ், 2016 நவம்பர் 7ஆம் தேதி உயிரிழந்தார்.
குஜராத் கலவரம்:
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இந்து - முஸ்லிம் கலவரத்தை அப்பட்டமாகக் காட்டும் இரு முகங்களாக இருந்தவர்கள் அசோக் பர்மர், குத்புதீன் அன்சாரி. ஒருபுறம் கைகூப்பி கண்கலங்கிய நிலையில் காணப்படும் குத்புதீன் அன்சாரி. மற்றொரு புறம் தலையில் காவி நிற ரிப்பனை அணிந்து, கையில் வாள் ஏந்தியபடி ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கும் அசோக் பர்மர். இந்த புகைப்படம்தான் குஜராத் கலவரம் பற்றி வெளியான பெரும்பாலான பத்திரிகைகளில் பயன்படுத்தப்பட்டது.
இதன்பிறகு இவர்கள் இடதுசாரி தோழர்களின் முன்னெடுப்பால், ஒன்றிணைந்து நண்பர்கள் ஆனார்கள். 2014ஆம் ஆண்டு குத்புதீன் எழுதிய ‘நான் குத்புதீன் அன்சாரி’ (‘Me Qutubuddin Ansari’) எனும் சுயசரிதை புத்தகத்தை அசோக் பர்மர் வெளியிட்டார்.
ஒற்றுமையே முன்னேற்றத்துக்கான வழி என பொருள்படும் வகையில் ‘ஏக்தா’ என அசோக் தொடங்கிய செருப்புக் கடையை அன்சாரி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: இடதுசாரிகளால் இணைந்த குஜராத் கலவரத்தின் எதிரெதிர் துருவங்கள் - காலம் காயங்களை ஆற்றும்!