உலகளவில் இணையதள வசதியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இணையதள வசதியைக் கொண்டு, உலகையே கைக்குள் கொண்டுவர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இத்தகையத் தொழில்நுட்ப வளர்ச்சியால், மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்தாலும், அதற்கேற்ப தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, இணையதளத்தைத் தவறாகப் பயன்படுத்தி பணம் திருடும் கும்பல்கள் இயங்கிவருகின்றன.
இதுபோன்ற கும்பல் ஒன்று உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே திக்குமுக்காட வைத்துள்ளது. அதாவது, இணையம் சார்ந்த மின்னணு பணப் பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி (பிட்காயின்) வாயிலாக மோசடியில் ஈடுபடும் ஒரு கும்பல், பில்கேட்ஸ், ஒபாமா உள்பட 320 விஐபிக்களின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளது.
விஐபிக்களின் ட்விட்டர் கண்க்கை ஹேக் செய்து, அவர்களது கணக்கில் போலியான பிட்காயின் லிங்கைப் பதிவிட்டு நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும்.
விஐபிக்களின் கணக்குகளில் பதிவிட்ட போலி பிட்காயின் செய்தியில், “ எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால், இரண்டாயிரம் டாலர்கள் உங்களுக்கு நான் திருப்பி அனுப்புவேன்.
எல்லாரும் கீழே உள்ள பிட்காயின் முகவரிக்கு அடுத்த 30 நிமிடங்களுக்குப் பணத்தை அனுப்புங்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட செய்தியைப் பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதைப்போன்று, எலோன் மஸ்க், ஜோ பிடன், வாரன் பபெட், கன்யே வெஸ்ட், மைக்கேல் ப்ளூம்பெர்க், ஆப்பிள் நிறுவனம், உபர் நிறுவனம், அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ், பராக் ஒபாமா உள்ளிட்ட 320 விஐபிக்களின் கணக்குகளை ஹேக் செய்து, போலி செய்தியைப் பதிவிட்டுள்ளனர்.
இந்தப் போலி செய்தி அடங்கிய ட்வீட் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரத்தில், மேற்குறிப்பிட்ட முக்கிய விஐபிக்களின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்தது. ட்விட்டரில் ஒருவரது கணக்கு உண்மையானதா அல்லது அதிகாரப்பூர்வமானதா என்பதை கண்டறிய ட்விட்டர் நிறுவனம் "ப்ளூ டிக்" வசதி கொண்டு அறியும் வசதியை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முக்கிய விஐபிக்கள் முகவரியில் இருந்து ஒரே மாதிரியான லிங்க் அடங்கிய செய்தி பதிவானதை அறிந்த ட்விட்டர் நிறுவனம், அந்த அனைத்து போலியான ட்வீட்களையும் உடனே நீக்கிவிட்டது.
பின்னர் சிறிது நேரத்தில், மீண்டும் விஐபிக்களின் அனைத்து கணக்குகளுக்கும் ட்வீட் செய்யும் வசதியை வழங்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தது. மோசடி கும்பலின் போலி பிட்காயின் செய்திகளை நம்பி, ஒரு சில நிமிடங்களில் அந்த லிங்க்-கில் சுமார் 369 பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
அதாவது, சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கா டாலர்களை பலர் அனுப்பி ஏமாந்துள்ளது தொடர் புகார்கள் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தநிலையில், இச்சம்பவம் விஸ்வரூபம் எடுக்க, பல தரப்பினர் புகார்களை தெரிவிக்கத் தொடங்கினர்.
இந்த மோசடி தொடர்பாக இணைய பாதுகாப்பு நிபுணர்(cyber security expert) கர்னல் இந்தர்ஜீத் சிங் கூறுகையில்," பிட்காயின் மோசடி, ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்தவர்கள் குறித்தும் பாதுகாப்புக் குழுவினர் விசாரித்தது வருகின்றனர்.
தற்போது வரை, இந்தத் தளத்தில் https://www.bitcoinabuse.com/reports/bc1qxy2kgdygjrsqtzq2n0yrf2493p83kkfjhx0wlh பிட்காயின் மோசடி தொடர்பாக 69 புகார்கள் பெறப்பட்டுள்ளன" என்றார்.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அதிகளவில் பயன்படுத்தும் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது உலகளவில் பெரும் பரபரப்பையும், சமூக வலைதளத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உலகளவில் பல நாடுகளில் பிட்காயின் பயன்பாட்டிலுள்ளது. சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரி: 9 மாதக் கைக்குழந்தை கரோனாவால் உயிரிழப்பு!