அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு குறைவான கால அவகாசமே உள்ளது. வரும் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் தனது இறுதிக்கட்ட தேர்தல் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன.
குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களமிறங்கும் நிலையில், அவரை எதிர்த்து ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் களமிறங்குகிறார். துணை அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் மைக் பென்ஸை முன்னிறுத்துகிறார். அவருக்குப் போட்டியாக கமலா ஹாரிஸை ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னிறுத்துகிறார்.
தேர்தலில் முக்கிய நிகழ்வான வேட்பாளர் நேரடி விவாதம் தற்போது நடைபெற்றுவருகிறது. துணை அதிபர் வேட்பாளர்களான மைக் பென்ஸ், கமலா ஹாரிஸ் இருவரும் முதல் விவாதத்தில் நேற்று(அக்.7) பங்கேற்றனர்.
முன்னதாக அதிபர் ட்ரம்ப் ஜோ பிடனுக்குமிடையே நடைபெற்ற விவதாம் காட்டமான ஒன்றாக இருந்தது. இருவரும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் தனி நபர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
ஆனால், துணை அதிபர் விவாதம் முதிர்ச்சியுடன் நடைபெற்றது. இருவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் நிதானமாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
கரோனா தொடர்பான தலைப்பில் ட்ரம்ப் தலைமையிலான அரசு மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என கமலா ஹாரிஸ் கடுமையாகச் சாடினார். அதற்கு பதிலளித்த பென்ஸ், கரோனாவை எதிர்கொள்ள ஜோ பிடன் முன்வைக்கும் நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் மாகாண அரசுகளிலும் முன்னேற்றத்தை தரவில்லை என்றும் கமலா ஹாரிஸ், ஜோ பிடன் பெருந்தொற்றை வைத்து அரசியல் லாபம் தேடப் பார்க்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.
அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள நிறவெறி பிரச்னை, உச்ச நீதிமன்றம், குடியேற்றம் தொடர்பான தலைப்புகளில் இருவரும் விவாதம் மேற்கொண்டனர்.
இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கருப்பின பெண் ஆவார். எனவே, குடியேற்றம், நிறவெறிப் போராட்டம் ஆகிய விவகாரங்களில் கமலா ஹரிசுக்கு ஆதரவு அதிகம் காணப்படுகிறது.
குறிப்பாக குடியேற்றம், ஹெச்1பி விசா போன்ற விவகாரங்களில் ட்ரம்ப் அரசின் செயல்பாடுகள் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுவதால் அவர்களின் ஆதரவு இந்திய வம்சாவெளிப் பெண் வேட்பாளாரான கமலா ஹாரிசுக்கு அதிகம் காணப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டது கடவுளின் ஆசீர்வாதம் - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்