அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தினசரி செய்தியாளர் சந்திப்பில், இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, "சீனாவின் ஊடுருவல் குறித்து நான் பல முறை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியுள்ளேன்.
சீனா மிகவும் முரட்டுத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா தன்னால் முடிந்ததை செய்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நம்மால் தனித்துப் பார்க்க முடியாது. இமயமலையின் மலைத்தொடர்கள் முதல் வியட்நாமின் பிரத்தியேக நீர்நிலைப் பகுதிகள் வரை... பல்வேறு தீவுகளிலும் கூட மோதல்களைத் தூண்டும் வகையிலேயே சீனா நடந்துகொண்டுள்ளது.
சீனாவின் இந்த அத்துமீறும் நடவடிக்கைகளை தொடர உலகம் அனுமதிக்கக்கூடாது. சீனாவுடன் எல்லையை பகிர்பவர்கள், தங்கள் நாட்டு இறையாண்மையை சீனா மதிப்பதாக சொல்ல முடியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க உலகம் ஒன்றுபட வேண்டும்" என்றார்.
மேலும், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய-சீன ராணுவத்திற்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றநிலை ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின் புதன்கிழமை இரு தரப்பு ராணுவமும் பின்வாங்கியது.
சீனாவின் அத்துமீறும் நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இதுதவிர, பாதுகாப்பு காரணங்கள் காரணமாக 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரம்ப்பை விமர்சிக்கும் மற்றொரு புத்தகம்: அடுத்த வாரமே வெளியிட திட்டம்!