கடந்த மாதம், அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பாதுகாப்பு துறையில் அமெரிக்க, இந்திய கூட்டணியின் முக்கியத்துவம் குறித்து லாயிட் எடுத்துரைத்தார்.
ஒரே மாதிரியான விழுமியங்கள் மற்றும் பொது நலனின் அடிப்படையில் அந்த உறவு கட்டமைக்கப்பட்டதாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமான பகுதியாக மாற்றுவதில் அமெரிக்க, இந்திய உறவு முக்கிய பங்காற்றும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவை முக்கிய கூட்டு நாடாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கருதுவதாக அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், "இந்திய, அமெரிக்க உறவுக்கு லாயிட் முக்கியத்துவம் தருகிறார். அந்த உறவு மேம்பட்டு வலுவடைய அவர் விரும்புகிறார். அதனை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட காத்துக் கொண்டிருக்கிறார்" என்றார்.