பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், நிதி நெருக்கடி, புல்வாமா தாக்குதல் தொடர்பான பதற்றம், நவாஸ் ஷெரீப் விவகாரம் உள்ளிட்டவைகளால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மீது, அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி, பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது. மேலும், வஞ்சகங்களையும், பொய்களையும் தவிர பாகிஸ்தான் வேறு ஒன்றும் வழங்கவில்லை என டிரம்ப் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில், பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணத்தை இம்ரான்கான் மேற்கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை, பிரதமர் இம்ரான்கான் ஜூலை 22 ஆம் தேதி சந்தித்துப் பேசுவார். இந்த சந்திப்பின் மூலம், பாகிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும், தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டப் பயங்கரவாதம், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் ஆகியவற்றைக் குறித்தும் ஆலோசனை மேற்கொள்வர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் புரட்சிகர படையைச் சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா ஜூன் 2 ஆம் தேதி அறிவித்ததையடுத்து, ட்ரம்ப் - இம்ரான்கானின் சந்திப்பை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதி செய்தன.
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவது குறித்து அமெரிக்கா - தலிபான் பிரதிநிதிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.