பிரதமர் நரேந்திர மோடி ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று அமெரிக்காவுக்குச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவுடி மோடி' (howdy modi) பிரமாண்ட நிகழ்ச்சி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கியது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்முறை கால்பந்து மைதானங்களில் ஒன்றான என்.ஆர்.ஜி. உள்அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இருநாட்டு உயர்மட்டக் குழு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். மேலும இதில் பங்கேற்ற 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முன்னிலையில் இருவரும் கூட்டாக உரையாற்றினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ’அமெரிக்க அதிபரை சந்தித்த இரண்டு சமயங்களிலும் அவர் அதே உற்சாகத்துடனும், நட்புடனும் தோன்றினார். அவரது தலைமைப் பண்மையும் தன் நாட்டின் மீது அவர் கொண்டுள்ள உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபருடன் தொடர்ந்து இந்தியா நல்ல உறவில் இருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ”பிரதமர் மோடி போன்ற நேர்மையான நண்பரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மோடி தனது திட்டங்களின் மூலம் இந்தியாவில் 30 கோடி மக்களின் ஏழ்மையை போக்கியுள்ளார்” என்றார்.