14ஆம் நூற்றாண்டிலிருந்து தனிமைப்படுத்தல், சுகாதாரத் தடுப்புகள், தூய்மைப்படுத்துதல், கிருமிநீக்கம் செய்தல், தொற்று பரவுவதற்கு காரணமானவர்கள் என்று நம்பப்படும் நபர்களை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நோய்க்கட்டுப்பாட்டு முறைகளில் மைல்கல்லாக இருப்பதுதான் தனிமைப்படுத்தல்.
தனிமைப்படுத்துதல் வரலாறு
வெனிஸில் புபோனிக் பிளேக் (1370) நோய்த்தொற்று 14ஆம் நூற்றாண்டில் 20 மில்லியன் ஐரோப்பியர்களைக் காவு வாங்கியது. இது 'கறுப்பு மரணம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் தொற்று நோயால் ஒரு பெரிய வர்த்தகத் துறைமுகமான வெனிஸ் பதற்றமடைந்தது. ஒரு கப்பல் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டதால் அதிலிருந்த பயணிகள், மாலுமிகள், பொருள்கள் அனைத்தும் கரையைச் சென்றடைய 40 நாள்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இதற்காக வெனிஸ் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ள ஒரு தீவில் மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையம் கட்டப்பட்டன.
அங்கு பிளேக் பாதித்த கப்பல்களிலிருந்த மாலுமிகள் குணமடைவதற்காகவோ அல்லது இறப்பதற்காகவோ அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த 40 நாள்கள் காத்திருப்புக் காலம்தான். 40 என்ற இத்தாலிய வார்த்தையிலிருந்து குவாண்டினாரியோ என அறியப்பட்டது. நோயைப் பற்றிய கருத்துகள் மாறியதால், தனிமைப்படுத்தப்பட்ட காலம் 40 லிருந்து 30 நாள்களாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், அதன் அசல் பெயர் நிலைத்துவிட்டது.
பிலடெல்பியா நகரை உலுக்கிய தொற்று
பிலடெல்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் (1793) இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து ஆயிரம் பேர் இறந்தனர். இது நகர மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கு. கிராமப்புறங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தப்பி ஓடிவிட்டனர். தொற்றுநோயின் உச்சகட்ட தாக்கத்தால், தினமும் கிட்டத்தட்ட 100 பேர் இறந்து கொண்டிருந்தபோது நகர அரசு வீழ்ச்சியைச் சந்தித்தது. பிலடெல்பியா ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மிகப்பெரிய நகரமாகும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ரத்தப்போக்கு' ஏற்பட்டது. அவர்களுக்கு மது கொடுப்பதே அந்த நேரத்தில் நன்கு அறியப்பட்ட சிகிச்சையாக இருந்தது. மேலும், நோயைத் தடுப்பதற்கான பிரதான கோட்பாடு ஏற்படுத்தப்பட்டது. அது, நகரத்திற்கு வெளியே உள்ள லாசரெட்டோ என்ற மருத்துவமனையில் மாலுமிகளைத் தனிமைப்படுத்துவதாகும்.
ஆனால் இந்த நோய் கொசுக்கள் மூலமாகப் பரவுகிறது. எனவே வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்ட பூச்சியினங்களை அழிப்பதைவிட தனிமைப்படுத்துதல் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை.
நியூயார்க்கில் டைபஸ் (1892)
1892ஆம் ஆண்டில், நியூயார்க்கில் புலம்பெயர்ந்த ரஷ்ய யூதர்களை ஏற்றிச்சென்ற படகு எல்லீஸ் தீவுக்கு ( Ellis Island) வந்தது. இந்தக் கப்பலிலிருந்த யூதர்கள் டைபஸ் என்ற நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நோய் அதீத காய்ச்சல், மயக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளைக் கொடுத்தது. இந்த நோய் பாதிப்பாளர்கள் நியூயார்க் நகருக்குச் சென்றதால், அங்கும் இது பரவியது என்று கூறப்படுகிறது. முதல்கட்டமாக வடக்கு தீவில் கூடாரங்களில் குறைந்தது 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
டைபஸ் பொதுவாக நச்சுக்காய்ச்சலாக அறியப்படுகிறது. இந்தவகை நோயால் உடலில் சிகப்பு புள்ளிகள் தோன்றும். சொறி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.
சான் பிரான்சிஸ்கோவில் புபோனிக் பிளேக் (1900)
சான் பிரான்சிஸ்கோவில் புபோனிக் பிளேக் நோய் 1900ஆம் ஆண்டுகளில் வேகமாகப் பரவியது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையின்படி முதல்கட்டமாக காகசியன் குடியிருப்புப் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து முடக்கப்பட்டன. காரணம், இந்நோயால் பாதிக்கப்பட்ட சீனர் ஒருவர் உணவகம் அருகே உயிரிழந்த நிலையில் கிடந்தார். எனினும் இந்நோய் சில நாள்களில் கட்டுக்குள் வந்தது.
ஆயினும் பல்லாயிரக்கணக்கான சீனர்கள் வேலையிழக்க இது காரணமாயிற்று. மேலும், சீன புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவது பற்றி சில மோசமான விவாதத்தையும் இது தூண்டியது. ஆனால், இது செயல்படவில்லை.
நியூயார்க் நகரில் டைபாய்டு (1907)
'டைபாய்டு மேரி' என்று அழைக்கப்படும் மேரி மல்லனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஐரிஷில் பிறந்த சமையல்காரர். அவர் டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்தும் பாக்டீரியாவை சால்மோனெல்லா (காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மரணத்தை ஏற்படுத்தும்) வடிவில் கொண்டுசென்றார். ஆனால், மல்லனுக்கு இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கான எதிர்ப்புச் சக்தி இருந்தது.
சமையல்காரராக அவர் செய்த வேலையால்தான் நகரத்தின் டைபாய்டு பரவல் ஏற்பட்டதாக அலுவலர்கள் கண்டறிந்தபோது, மல்லன் மூன்று ஆண்டுகள் தனிமைப்படுத்தலுக்காக நார்த் பிரதர் தீவுக்கு அனுப்பப்பட்டார். 'மீண்டும் ஒருபோதும் மற்றவர்களுக்கு சமைக்க மாட்டேன்' என்று அவர் உறுதியளித்திருந்தார்.
ஆனால் அவர் அந்தச் சொல்லை உடைத்தார். பீச் ஐஸ்கிரீம் தயாரிப்பதில் நாட்டம் காட்டினார். இதனால், 1915இல் அவர் கைதுசெய்யப்பட்டு, மற்றொரு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் 23 ஆண்டுகள் கழித்தார்.
யுனைடெட் ஸ்டேட்ஸில் (1917) வெனீரியல் நோய்
முதலாம் உலகப்போர் உச்சமடைந்த நேரத்தில் சிபிலிஸ், கோனோரியா போன்ற பாலியல் மூலம் பரவும் நோய்கள் காரணமாக அமெரிக்க ராணுவம் தகுதியற்ற இளைஞர்களின் எண்ணிக்கை குறித்து கவலை கொண்டது. முகாம் பெண்கள், பாலியல் தொழிலாளிகள், அமெரிக்க பயிற்சி மைதானங்கள்-ராணுவ ஆள்சேர்ப்பு மையங்களைச் சுற்றியுள்ள பிற பெண்களையும் அவர்கள் கவனித்தனர்.
கட்டாய சோதனை மூலம் பாலியல் பரவும் நோய் (sexually transmitted disease) இல்லாதவர்கள் எனக் கருதப்படும்வரை பாலியல் தொழிலாளிகளையும் முகாம் சிறுமிகளையும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ வரலாற்றாசிரியர் ஆலன் பிராண்ட், குறைந்தது 30 ஆயிரம் பெண்கள் சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 'இது நோய் பரவும் விகிதங்களில் மாற்றத்தைக் காட்டியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என்றும் உறுதியாகக் கூறினார்.
ஆனால், இந்தப் பெண்கள் போரில் அமெரிக்கர்களின் வெற்றிக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்தனர் என்ற கருத்து இருந்தது. பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் நோயால் பாதிக்கப்படவில்லை.
ஐரோப்பா, அமெரிக்காவில் காய்ச்சல் தொற்றுநோய் (1917-1919)
இந்த உலகளாவிய தொற்றுநோய், 50 மில்லியன் மக்களைக் கொன்றது. மேலும் தனிமைப்படுத்தப்படுவதையும் தூண்டியது. அத்துடன் ஐரோப்பாவில் பள்ளி ரத்துசெய்தல், அமெரிக்காவின் சில பகுதிகளில் பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதித்தல் போன்றவற்றையும் அமல்படுத்த காரணமானது.
இந்த முறைகள் தற்காலிகமாக இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்தின. இன்ஃப்ளூயன்சா உலகில் மிகவும் மோசமான தொற்று நோய்களில் ஒன்றாகும் என்றார் மருத்துவ வரலாற்றாசிரியர் மார்க்கலின்.
கனடாவில் சார்ஸ் (2003)
2003ஆம் ஆண்டின் கடுமையான சுவாச நோய் (SARS) தொற்று பல்வேறு நாடுகளில் தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்த போதிலும், கனடாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின்படி, கனடா நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பாதிப்புக்கும் கிட்டத்தட்ட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். டொராண்டோவில் 250 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், சுமார் 30 ஆயிரம் பேர் மருத்துவமனைகளிலும் அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். 2,500 பாதிப்புகளைக் கொண்ட பெய்ஜிங்கிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சீனாவில் புபோனிக் பிளேக் (2014)
புபோனிக் பிளேக்கின் பாதிப்பை சந்தித்தபோது, சான் பிரான்சிஸ்கோவின் நூற்றாண்டு கால புத்தகத்திலிருந்து சீனா ஒரு பக்கத்தை எடுத்தது. இந்த நோய் சீனாவில் அணில் மூலமாகப் பரவியது.
பாதிக்கப்பட்ட அணில், அந்த அணிலுடன் தொடர்பில் இருந்த நபர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் சீனாவின் பல பகுதிகள் அடைப்புக்குள்ளாகின. நகரின் பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
லைபீரியா, சியரா லியோனில் எபோலா (2014)
லைபீரியாவில் 2014 ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் பாயிண்டின் சுற்றுப்பகுதி 10 நாள்களுக்கு கடுமையான கண்காணிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நோயாளிகள் மக்கள் அடர்ந்து வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் 21 நாள்களுக்கு அண்டை வீட்டாரிடமிருந்து மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசு வலியுறுத்தியது. இதனால் சில இடங்களில் போராட்டங்களும் நடந்தன.
லைபீரியாவின் அண்டை நாடான சியரா லியோனில், செப்டம்பர் மாதத்தில் மூன்று நாள் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்கும்படியும் வீட்டிலேயே இருக்கும்படியும் அரசு கேட்டுக்கொண்டது. அதே நேரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் வீட்டுக்குச் சென்று, நோயுற்றவர்களைத் தேடி, சோப்புகளையும் வழங்கினர்.
மருத்துவர்கள், எபோலாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். மேலும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: கோவிட்-நெருக்கடி: பேராபத்தில் இந்திய காசநோயாளிகள்!