கரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர். இதனிடையே, மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் 'ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்’ என்ற மருந்தை கரோனா வைரஸ் நோய்க்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து, அம்மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது.
இம்மருந்தை இந்தியா அதிகளவில் தயாரித்துவரும் நிலையில், இந்த ஏற்றுமதி தடையை திரும்பப் பெற வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியாவை பகிரங்கமாக மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.
இதனையடுத்து ஏற்றுமதிக்கான தடை திரும்பப்பெறப்பட்ட நிலையில், 35.82 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்தது. மேலும், மருந்தை தயாரிப்பதற்கான 9 மெட்ரிக் டன் பொருள்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இது இன்று அமெரிக்காவிற்கு சென்றடைந்தது. கரோனா வைரஸ் நோய் அமெரிக்காவை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. 20,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளை மாளிகை பின்பற்றும் வேறு நாட்டு தலைவர்கள் யார் தெரியுமா?