போர்ட்-ஓ-பிரின்ஸ்: வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில், ஆகஸ்ட் 14ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியது. கரீபியன் தீவுகளில் பதிவான ரிக்டர் அளவுகளில் இதுவே மிக அதிமாகும். போர்ட்-ஆப்-பிரின்சிலிருந்து 125 கி.மீ. தொலைவில் இந்த நிலடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 1,419 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், அலுவலகங்கள், தேவாலயங்கள் சரிந்துள்ளன. பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதனிடையே, ஹைதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. தற்போது கனமழை பெய்து வருவதால், மீட்புப்பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
ஹைதி 2010 நிலநடுக்கம்
ஹைதி, கரீபியன் கடலின் மூன்றாவது பெரிய தீவாகும். கிரேட்டர் அண்டிலிஸ் தீவுக்கூட்டத்தில், ஹிஸ்பானிலோ தீவில் அமைந்துள்ளது. இது கியூபா, ஜமைக்கா தீவுகளுக்கு கிழக்கிலும், பஹாமாஸ், கைகோஸ் தீவுகளுக்கு தெற்கிலும் உள்ளது. இந்த நாடு டொமினிக்கன் குடியரசோடு நாட்டை பகிர்ந்துகொள்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
ஹைதியில் 2010ஆம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு ஏழாக இருந்தது. இந்த நிலநடுக்கம், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதிக்கு மேற்கே உள்ள லூஜோன் நகருக்கு அருகில் ஏற்பட்டது. இதனால், 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது.
2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், 30 ஆயிரம் வணிக கட்டடங்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக அதிபர் மாளிகை, சட்டப்பேரவைக் கட்டடம், சிறைச்சாலை உள்ளிட்ட கட்டடங்களும் நொறுங்கி விழுந்தன. இந்தச் சம்பவத்தின்போது, மருத்துவம், உணவு விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக, ஹைதி மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஹைதி நிலநடுக்கம்: உயிரிழப்பு 304ஆக உயர்வு!