செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், "எங்கள் வேலை இரு தரப்புக்குமிடையே நல்லதைச் செய்வது, ஆனால் நல்லதைச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு இரு தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை" என்றார்.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்தது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அவரது பதில், காஷ்மீர் என்பது இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னை என்ற சிம்லா ஒப்பந்தத்தை(1972) ஆதரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், "அப்பகுதியில் உள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த விவகாரத்தில் நான் ஏற்கனவே எனது ஆலோசனையை வழங்கியுள்ளேன். தொடரந்து ஆலோசனை வழங்குவேன்" என்று கூறினார்.
மேலும், "என்னைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இந்த பிரச்னையில் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதுவே ஒரு நல்ல தீர்வை வழங்கும்" என்றார்.
இதையும் படிக்கலாமே: 'காஷ்மீர் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை ஐ.நா. உறுதி செய்ய வேணடும்' - மலாலா