சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தாக்கம் மோசமடைந்துவருகிறது. இதுவரை ஏழு கோடியே 14 லட்சத்து 51 ஆயிரத்து 703 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து ஓராயிரத்து 452ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 91 லட்சத்து 72 ஆயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து ஐந்தாயிரத்து 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 541 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இரண்டாம் அலை தாக்கம் அந்நாட்டில் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 62 லட்சத்து 95 ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கோவிட்-19 பாதிப்பின் காரணமாக மூன்று லட்சம் உயிரிழப்புகள் கண்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 02 ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 68 லட்சத்து 36 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 453 ஆக உள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ உலகில் அமெரிக்கா பெரும் சாதனை படைத்துள்ளது- ட்ரம்ப்