சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று, தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. குறிப்பாக, மேலை நாடுகளில்தான் இத்தொற்றின் தாக்கம் படுமோசமாக உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இப்பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக 69,872 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,64,830ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் 4,612 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் இறப்புகளின் எண்ணிக்கை 2,11,609ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 9,22,397 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்தொற்றால் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்படுள்ளன.அந்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 56,803 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக, இத்தாலியில் 1,99,414 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 66,624 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 26,977 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஸ்பெயினில் 23,521 பேரும், பிரான்ஸில் 23,293 பேரும், இங்கிலாந்தில் 21,092 பேரும் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரைஸின் பிறப்பிடமான சீனாவில் 82, 836 பேர் பாதிக்கப்பட்டும், 4,633 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனாவால் 60,000 அமெரிக்கர்களே உயிரிழப்பர், அதனால் எனக்கே வாக்களியுங்கள்!' - ட்ரம்பின் வாக்கு வேட்டை!