திண்டிவனம்: புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், முகுந்தன் என்பவரை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். தமது மூத்த மகளின் மகனான (பேரன்) முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்ததற்கு, அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே ஆட்சேபம் தெரிவித்தார். கட்சியில் சேர்ந்து சில மாதங்களிலேயே அவருக்கு பதவியா? பாமக என்ன குடும்ப கட்சியா? என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
அன்புமணியின் இந்த பேச்சைக் கேட்டு ஆக்ரோஷமான ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி.. நான் எடுப்பதுதான் கட்சியின் முடிவு. இந்த முடிவில் விருப்பமில்லாதவர்கள் யாராக இருந்தாலும் வெளியேறலாம் என்று காட்டமாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி, தொண்டர்கள் என்னை இனி பனையூரில் உள்ள தமது அலுவலகத்தில் என்னை வந்து சந்திக்கலாம் என்க்கூறியவாறு கையில் வைத்திருந்த மைக்கை வேகமாக மேஜையில் வைத்துவிட்டு கிளம்பினார். தந்தை மகனுக்கு இடையே பொது மேடையில் நிகழ்ந்த வார்த்தை போர் பாமகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர, சமரச குழு உடனடியாக களமிறங்கியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வன்னியர் சங்க செயலாளரும். சேலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கார்த்திக் தலைமையான குழு, டாக்டர் ராமதாசை சந்தித்துவிட்டு சென்னை பனையூரில் உள்ள அன்புமணி ராமதாசை சந்தித்து, ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டது.
அப்போது கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அன்புமணி பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது. அன்புமணியின் கருத்துகளை ராமதாஸிடம் தெரிவிப்பதற்காக, கார்த்தி தலைமையிலான சமரச குழு தற்போது தைலாபுரம் விரைந்துள்ளது. இக்குழுவில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அன்புமணியும் ராமதாஸை சந்திப்பதற்காக தைலாபுரம் சென்றடைந்தார்.
"அவர் சொல்லுக்கு கட்டுப்படுவேன்": இதனிடையே, " பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு நான் கட்டுப்பட்டவன். தொண்டராக இருக்கச் சொன்னாலும் இருந்து இந்த கட்சிக்கு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை நான் செய்வேன். என்னால் இந்த கட்சிக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதனால் மருத்துவர் ஐயா என்ன சொல்கிறாரோ அதை நான் செய்வேன்." என்று முகுந்தன் கூறியுள்ளார்.