சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கோனார் உயிரிழந்துவருகின்றனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 99,098 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,85,504ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் நேற்று 4,820 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,29,731ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை 20,21,666 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா வைரஸ் பெருந்தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (15,91,991) முதலிடத்திலும், ரஷ்யா (3,08,775) இரண்டாம் இடத்திலும், பிரேசில் (2,93,357) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை இப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. இன்று காலை எட்டு மணி நிலவரப்படி, நாட்டில் 1,12,359 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இத்தொற்றால் 94,994 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனில் 35,704 பேரும், இத்தாலியில் 32,330 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவத் துறையில் முக்கிய தேவைகளில் ஒன்று 'செயற்கை நுண்ணறிவு'...!