கோவிட்-19 தொற்று காரணமாக உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றன. இந்நிலையில், உலகெங்கும் கோவிட்-19 ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிராக நடத்தும் போராட்டத்திற்கு உதவும் வகையில் கூடுதலாக 150 மில்லியன் டாலர்கள் பில் & மெலினா கேட்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இது குறித்து பில் & மெலினா கேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச அளவில் 2 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கோவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சர்வதேச தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகக் கூடுதலாக 150 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளோம். முன்பு அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் டாலர்களுடன் சேர்த்து மொத்தம் 250 மில்லியன் டாலர்கள் பில் & மெலினா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த நிவாரண நிதி என்பது குறைந்த வருமானமுடைய நாடுகளிலுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வைரஸ் தொற்று குறித்து பில் கேட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வைரஸ் பரலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெகு சில நாடுகளே வைரஸ் பரவலைத் தடுக்க சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளன" என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: தென் கொரியா துரித கருவிகளை பிரிட்டன் சோதனை