அமெரிக்காவில் புயல் சூறாவளி தாக்குவது வழக்கமான ஒன்றாகிவருகிறது. அந்த வகையில், வடகிழக்குப் பகுதியில் குளிர்காலப் புயல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, பி.டபிள்யு.ஐ. மார்ஷல் விமான நிலையத்தில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்திலிருந்து விலகியது. இருப்பினும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 111 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
நியூயார்க் நகரில் மட்டும் புயல் காரணமாக இருவர் உயிரிழந்ததாக, ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். புயல் காரணமாக பென்சில்வேனியா மாகாணத்தில் 66 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளாகும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் விபத்துக்குள்ளான வாகனங்களைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதால், அச்சாலை தற்காலிகமாக முழுவதும் மூடப்பட்டுள்ளது.