கரோனா தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 29 லட்சத்து 82 ஆயிரத்து 928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 569 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை விடவும் அமெரிக்காவில் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப், ''அமெரிக்கா அதிகமான பரிசோதனைகளை செய்து வருகிறது. ஆனால் 99 சதவிகித கரோனா பாதிப்புகள் மக்களுக்கு தீங்கு விளைவிக்காதவை'' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் டாக்டர் ஸ்டீஃபன் பேசுகையில், ''நான் யார் சரி, தவறு என்ற கோட்பாடுகளுக்குள் செல்ல விரும்பவில்லை. கரோனா பிரச்னையின் தீவிரத்தை அரசின் தகவல்களே சரியாக அனைவருக்கும் கூறும்.
கரோனா பாதிப்புகள் நிச்சயம் முக்கியமான பிரச்னைகளே. அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக் கவசங்களை அணிந்து, தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.
இதைப்பற்றி டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் ஆஸ்டின் பேசுகையில், ''அதிபர் டிரம்ப்பின் இந்தக் கருத்து தவறானது. உள்ளாட்சி நிர்வாகங்களின் பாதுகாப்பு வழிக்காட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 சதவிகிதம் பேர் நிமோனியா, சுவாசப் பிரச்னை ஆகியவற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊழல் வழக்குகளின் மைய புள்ளியாக திகழும் இஸ்ரேல் நாட்டு பிரதமரின் மகன்