தேர்தல் பரப்புரை
பருவநிலை மாற்றத்தின் மீது நம்பிக்கையில்லாத ஜயிர் பொல்சனாரோ 2018இல் தனது தேர்தல் பரப்புரையின்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை தளர்த்தி விவசாயம் மற்றும் தொழிற்சாலை வளர்ச்சிக்கு வழிவகை செய்துதருவேன் என வாக்களித்தார். மேலும், அமேசானில் அதிகளவு காடழிப்பு சம்பவங்கள் அரங்கேறியபோதும், பிரேசில் ராணுவம் அந்நாட்டு சர்வாதிகார ஆட்சியைப் பாராட்டிப் பேசிவந்தது. இவை, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களையும், அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினரையும் முகம் சுழிக்கவைத்தது.
சுற்றுச்சூழல் கொள்கைகள்
2019 ஜனவரியில் பிரேசில் அதிபராக ஜயிர் பொல்சனாரோ பதவியேற்ற பின்னர், சுற்றுச்சூழல் தொடர்பாக அவரது கொள்கைகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. உதாரணமாக, பிரேசிலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் இபாமா (IBAMA) அமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியில் 25 விழுக்காட்டை அவர் குறைத்துள்ளார். சுற்றுச்சூழல் குற்றங்களுக்கு இமாபா விதிக்கும் அபராதங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளன.
சட்டவிரோதமாக காடழிப்புச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படையை பொல்சனாரோ அரசு முடக்கியுள்ளதாக இபாமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜயிர் பொல்சனாரோ, இபாமாவை பகிரங்கமாக விமர்சித்தார்.
'இரண்டு கைகளிலும் பேனாக்களுடன் வரும் நபர் விண்ணைமுட்டும் அளவிற்கு அபராதங்களை விதிக்கிறார்... இதனை தடுத்து நிறுத்த வேண்டும்' - பொல்சனரோ
பொல்சனாரோ பதவியேற்ற பிறகு அமேசானில் காடழிப்புச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகள் சொல்கின்றன. இது பிரேசில் பெயரை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகக் கூறி இபாமாவின் தலைமை இயக்குநர் ரிகார்டோ கொல்வாவோ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பருவநிலை மாற்றத்திற்கெதிரான பொல்சனாரோ அமைச்சரவை
பொல்சனாரோவின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகிக்கும் ரிக்கார்டோ சலெஸ் (Ricardo Salles), சாவ் பாலோ மாநிலத்தின் சுற்றுச்சூழல் செயலராக (2016- 2018) இருந்தபோது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் வரைபடங்களை மாற்றி அமைத்து சுரங்கப்பணிகளுக்கு சாதகமாக இருந்தாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர் ஆவார்.
மேலும், பிரேசிலின் விவசாயத் துறை அமைச்சர் தெரெசா கிறிஸ்டினா பழங்குடியினருக்கு எதிராகவும் விவசாயிகளுக்குச் சாதகமாகவும் செயல்பட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பிரேசிலின் வெளியுறவுத் துறை அமைச்சர் எர்னெஸ்டோ அரொஜோ தனது வலைப்பூ பக்கத்தில் (BLOG), "சீனாவை வளர்ப்பதற்கு இடதுசாரிகள் பயன்படுத்தும் குருட்டு நம்பிக்கையே (DOGMA) பருவநிலை மாற்றம்" எனப் பதிவிட்டுள்ளார்.
பழங்குடியினர் வாழ் வனப்பகுதி:
'நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பழங்குடியினர் வாழ் வனப்பகுதிகளை விரிவாக்கம் செய்ய ஒரு சென்டிமீட்டர் கூட இடம் ஒதுக்கமாட்டேன்' என தேர்தல் பரப்புரையின்போது பொல்சனாரோ சூளுரைத்தார்.
அதற்கேற்ப அவரது நடவடிக்கைகளும் இருந்துவருகின்றன. உதாரணமாக, நிதி அமைச்சகத்தின் மேற்பார்வையில் இருந்த பழங்குடியினர் வாழ் வனப்பகுதிகளை தெரெசா கிறிஸ்டினா தலைமையிலான விவசாய அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர உத்தரவு பிறப்பித்தார். (ஆனால், இந்த உத்தரவு செல்லாது என பிரேசில் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது)
அமேசானின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளையொட்டி நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை அமைத்து அவற்றை ஆக்கிரமிப்பது தொடர்பான பொல்சனாரோ அரசின் திட்ட ஆவணங்கள் கசிந்ததாக openDemocarcy வெளியிட்ட செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தரவுகள் சொல்வதென்ன?
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையே வணிகத்தை பலப்படுத்த அமேசான் வனப்பகுதியில் 20 விழுக்காடை அழித்து ட்ரான்ஸ்-அமேசானியா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. விவசாயம், கால்நடை மேய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக அமேசான் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டுவருகின்றன. 1970ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டுப்பார்த்தால் சுமார் எட்டு லட்சம் கோடி சதுரடி அளவிற்கு அழிக்கப்பட்டுள்ளன. இது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்துக்கு இணையானது!
அமேசான் மழைக்காடுகளின் 60 விழுக்காடு பரப்பு பிரேசில் நாட்டுக்குள் அடங்கும். அதில், 2019இல் மட்டும் 72 ஆயிரத்துக்கும் அதிகமான காட்டுத் தீ சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 2013ஆம் ஆண்டைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமானதாகும்.