கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்காதது ஈக்வடார் நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. பொது மக்கள் தனி நபர் விலகலை முறையாகக் கடைப்பிடிக்காத காரணத்தினால், அந்நாட்டில் பெரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்க சவப்பெட்டிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை நடைபாதைகளிலேயே போட்டுச் செல்லும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். கோவிட்-19 வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட குயாகுவில் என்ற பகுதியில் நிலைமை மிகவும் சிக்கலாகியுள்ளது.
1.7 கோடி மக்களைக் கொண்ட ஈக்வடார் நாட்டில்தான் கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரிக்கவுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ஈக்வடார் நாட்டிற்கும் ஸ்பெயின் நாட்டிற்கும் வலுவான பந்தம் உள்ளது. சொல்லப்போனால், ஈக்வடார் நாட்டின் அலுவல் மொழியாகவே ஸ்பேனிஷ் மொழி உள்ளது. தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஈக்வடார் நாட்டு மக்கள் செல்வது வழக்கம்.
கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி, 70 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஈக்வடார் நாட்டிலுள்ள குயாகுவில் என்ற பகுதிக்கு வந்துள்ளார். அவருக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் தொடர்பு கொண்ட 80 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதேபோல, ஸ்பெயினில் வைரஸ் தொற்று பெரியளவில் பரவத் தொடங்கியதும், அங்கு படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் ஈக்வடார் திரும்பினர். ஸ்பெயினிலிருந்து திரும்பிய சிலர் குயாகுவில் பகுதியில் நடைபெற்ற திருமண விழா உள்ளிட்ட சில விழாக்களில் பங்கேற்றனர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இதைத்தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என ஈக்வடார் அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் உதவித் தொகையாக மாதமாதம் 60 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வசதியான மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தனர். இருப்பினும், மற்றவர்கள் அரசின் மானியங்களைப் பெற வங்கிகளை நோக்கிப் படையெடுத்தனர். வைரஸ் தொற்றுக்கு எளிய இலக்குகளாக இவர்கள் மாறினர்.
ஈக்வடார் நாட்டில் சுமார் 70 விழுக்காட்டிற்கும் மேலான கோவிட்-19 வைரஸ் தொற்றுகள் குயாஸ் மாகாணத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் பொதுமக்கள் கூட்டத்தில் நிரம்பிவழிகின்றன. இறந்தவர்களின் உடல்களை உறவினர்களுக்கு வழங்கவே பல நாள்கள் ஆகிறது.
குயாகுவில் பகுதியில் கரோனா தொடர்பான அவசர அழைப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்ணைப் பொதுமக்கள் எப்போது தொடர்புகொள்ள முயன்றாலும் பிஸியாக இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்றால் ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிடப் பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அந்நாட்டின் அதிபர் லெனின் மோரேனோவும் இவற்றையெல்லாம் ஒப்புக் கொண்டுள்ளார். மிகக் குறைந்த அளவே வைரஸ் தொற்று குறித்த பரிசோதனைகள் நடத்தப்படுவதால், வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கணிப்பது மிகக் கடினம்.
சவப்பெட்டிகளுக்கு பெரும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் உடல்களை அட்டைப் பெட்டிகள் மூலமே ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். இறந்தவர்களைப் புதைக்கக் கல்லறைகளிலும் இடமில்லை.
மார்ச் மாத இறுதி வரை மட்டும் குயாகுவில் பகுதியிலுள்ள வீடுகளிலிருந்து 1,350 உடல்களை அகற்றியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிதீன் கவர்களில் சுற்றப்படும் உயிரிழந்தவர்களின் உடல்கள் அழுகிப்போகும் வரை பல நாள்கள் நடைபாதைகளிலேயே விடப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதுபோன்று 150 உடல்கள் கைப்பற்றப்பட்டு வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி நிதி கிடையாது, உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் செக்