'அன்னை பூமி' பிரபஞ்சத்தில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்திற்கும் வீடாக விளங்கும் ஒரே கோள். ஆம், நமது சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் பூமி மட்டுமே உயிருள்ள ஜீவன்களைக் கொண்டு உயிர்ப்புடன் இயங்கிவருகிறது. வாழும் உயிருக்கு ஒளி, காற்று, நீர், உணவு, உறைவிடம் ஆகியவற்றை தந்து நம்மைப் பாதுகாக்கும் இந்த பூமியைப் பத்திரமாகக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டல்லவா! அதை நினைவுகூறும் வகையில்தான், ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.
உலக பூமி தினம் இதுவரை:
உலக பூமி தினத்தைத் தொடங்கிவைத்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கேலாட் ஆண்டன் நெல்சன். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர், செனட் சபை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.
1970 ஏப்ரல் 22ஆம் தேதி அமெரிக்காவில் முதல் உலக பூமி தினத்தை ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியவர் கேலாட் ஆண்டன் நெல்சன். அப்போது, அவர் தலைமையில் அமெரிக்காவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் விதத்தில் முதல் உலக பூமி தினத்தைக் கொண்டாடினர்.
பின்னர் 1990ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மற்றொரு சுற்றுச்சூழல் ஆர்வலரான டெனிஸ் ஹயேஸ் 141-க்கும் மேற்பட்ட நாடுகளை ஒருங்கிணைத்து உலக பூமி தினத்தை உலகளவில் கொண்டு சேர்த்தார்.
2000ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட உலக பூமி தினத்தில் ஹாலிவுட் நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் 183 நாடுகள் பங்கேற்றன.
இவ்வருடம் 49ஆவது உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. 'நமது உயிரினங்களைக் காப்போம்' - 2019 ஆம் ஆண்டு உலக பூமி தினத்தின் கருதுகோளாகும். படிப்படியாகக் குறைந்து அழிந்து கொண்டிருக்கும் ஜீவ ராசிகளான தேனி, யானை, ஒட்டகச்சிவிங்கி, திமிங்கலம், பவளப்பாறை போன்றவற்றை அழிவிலிருந்து மீட்க வேண்டி சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் 2019ஆம் ஆண்டு பூமி தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
2020ஆம் ஆண்டு 50ஆவது உலக பூமி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதைச் சிறப்பாக முன்னெடுக்கும் முயற்சியில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தீவிர ஏற்பாடுகளை இந்த வருடமே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராஃபிக்சில் கலக்கிய கூகுள்:
உலகின் முக்கிய நிகழ்வுகளுக்குச் சிறப்புக் காட்சி வடிவம் தந்து தனது முகப்பு பக்கத்தில் டூடுல் என்ற பெயரில் வெளியிடுவது கூகுள் நிறுவனத்தின் வழக்கம். அந்த வகையில் உலக பூமி தினத்திற்குக் கார்ட்டூன் வடிவில் சிறப்புக் காட்சியமைப்பை உருவாக்கியுள்ளது.
![Albatross](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/3071916_ins.png)
அதில் நீண்ட இறக்கைக் கொண்ட ஆல்பெட்ராஸ் பறவை, உலகின் நீளமாக வளரக்கூடிய மரமான கோஸ்டல் ரெட்வுட், உலகின் மிகப்பெரிய கடல் வாழ் தாவரமான அக்வாட்டிக் லில்லி உள்ளிட்ட அரியவகை ஜீவராசிகளை கிராஃபிக்ஸ் வடிவில் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
![aquatic](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/3071916_ins3.png)
இது போன்ற பல்வகை ஜீவராசிகள் அனைத்துக்கும் இருப்பிடமாகத் திகழும் பூமி எங்கள் அனைவரின் வீடாகும் என ஜீவ ராசிகள் அனைத்தும் கூறுவதாக அந்த கிராஃபிக்ஸ் முடிகிறது.
![Tree](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/3071916_ins2.png)