உலகெங்கும் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல, அமெரிக்காவிலும் கடந்த சில வாரங்களாகவே கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கொ ஒரு லட்சத்தை தாண்டியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையில் ஃபைஸர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தும், மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தும் 90 விழுக்காட்டிற்கு மேல் பலனளிப்பதாக இவ்விரு நிறுவனங்களும் அறிவித்தன.
மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முழுமையாக முடிந்ததும் விரைவில் இந்தத் தடுப்புமருந்துகள் புழக்கதிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா தடுப்புமருந்து குறித்த இந்த அறிவிப்பு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும், கரோனா தடுப்புமருந்து புழக்கத்திற்கு வந்தாலும்கூட பொதுமக்கள் சில காலம் மாஸ்க்குகளை தொடர்ந்து அணிய வேண்டும் என்று அமெரிக்க தொற்றுநோய் வல்லுநர் அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "90 விழுக்காட்டிற்கும் மேல் பலனளிக்கும் தடுப்புமருந்தின் செய்தி கேட்டால் மக்களுக்கு அதிக நம்பிக்கை வருவது இயல்புதான்.
ஆனால், ஒருவர் தடுப்புமருந்து எடுத்து கொண்டதாலேயே தற்போது பின்பற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை கைவிடலாம் என்றில்லை. ஏனென்றால், நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இந்த தடுப்புமருந்துகள் 90 முதல் 95 விழுக்காடு மக்களிடம் மட்டுமே வேலை செய்யும், உங்கள் உடலில் வேலை செய்யுமா என்று தெரியாது.
எனவே, சில காலம் மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவேளையை கடைப்பிடித்து இருப்பதுதான் உங்கள் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,"தடுப்புமருந்து புழக்கத்திற்கு வந்தாலும்கூட உடனடியாக நம்மால் பழைய நிலைக்கு செல்ல முடியாது. படிப்படியாகவே செல்ல முடியும்" என்றார்
இதையும் படிங்க: 95 விழுக்காடு பலனளிக்கும் மாடர்னா கரோனா தடுப்பு மருந்து!