அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு கட்சியினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில், அதிபர் ட்ரம்பிற்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப், கடந்த வாரம் வீடு திரும்பினார். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தனிமையில் இருந்த ட்ரம்பிற்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து ட்ரம்ப் தனது பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், "கரோனா உறுதி செய்யப்பட்டபோது, என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஆனால் மிக விரைவாக நன்றாக உணர்ந்தேன். அது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. ஆன்ட்டிபாடிகள் என்று நினைக்கிறேன், அதை நான் எடுத்துக்கொண்டேன். இதனால் நான் சூப்பர்மேனைப் போல் உணர்ந்தேன்.
எனக்கு சிகிச்சையளிக்கும்போது 14 மருத்துவர்கள் என்னைச் சுற்றி இருந்தனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.
வேண்டுமென்றால் நான் வெள்ளை மாளிகையிலேயே தங்கியிருக்கலாம். ஆனால் நான் அமெரிக்காவின் அதிபர். என்னால் அதை செய்ய முடியாது. நான் வெளியே வந்து, மக்களை சந்திக்க வேண்டும். இதைச் செய்வது ஆபத்தானது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் செய்ய வேண்டியதை நாம் செய்தாக வேண்டும் அல்லவா?" என்றார்.
இதையும் படிங்க: அழகிய பெண்களை முத்தமிட ஆசை - பரப்புரையில் ட்ரம்பின் கிளுகிளுப்பு பேச்சு!