கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் உலகெங்கும் தொடர்ந்து மோசமாகிவருகிறது. குறிப்பாக உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா இந்த வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரே நாளில் மட்டும் கோவிட் - 19 தொற்றால் அமெரிக்காவில் 2,129 பேர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,981ஆக உயர்ந்தது.
மேலும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடமாக நியூயார்க் உள்ளது. நியூயார்க்கில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "கரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் அமெரிக்கா தொடர்ந்து முன்னேறிவருகிறது. கண்ணுக்குத் தெரியா கிருமிகளுடன் நடைபெறும் இந்த யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து வருந்துகிறேன். இருப்பினும் நிலைமை விரைவில் மாறும்.
அமெரிக்காவில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு ஒரு லட்சம் பேருக்கு 34.7 ஐசியூ படுக்கைகள் இருக்கின்றன. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் முறையே இது 12.5, 11.6 மற்றும் 9.7ஆக உள்ளது. மேலும், அமெரிக்காவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்களும் உள்ளன" என்றார்.
கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் ஆரம்பகட்ட சோதனைகளை நோயாளியிடம் நடத்த ரட்ஜர்ஸ் என்ற நிறுவனத்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈக்வடாரில் வீதியில் வீசியெறியப்படும் உடல்கள்