குழந்தைகள் மற்றும் அவர்களின் கல்வி நலனுக்கான சேவை அமைப்பான யுனிசெப் உலகளவில் கரோனா பாதிப்பால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து சமூகவியல் நிபுணர் லாரன்ஸ் சாண்டி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலக மக்கள் அனைவரும் தற்போதை சூழலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை, உயிரிழப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திவருகின்றனர். ஆனால் இந்த அசாதாரண சூழலில் குழந்தைகள் நலன் குறித்த நமது கவனம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு என்பது கோடிக்கணக்கான குழந்தைகளின் உடல்நலனை சார்ந்தது அல்ல. கல்வி, பாதுகாப்பு, வறுமை ஆகியவை குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பு, பொருளாதாரம் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட நாடுகளில் சராசரி வருவாய் இந்த ஆண்டு கடும் சரிவைச் சந்திக்கும். இந்த நாடுகளில் உள்ள ஏழை எளிய மக்களின் அன்றாட தேவைகளுக்கான வருவாய் உறுதிப்படுத்துவதில் கடும் சவால் எழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டியது தலையாயக் கடமையாகும்.
அத்துடன் உலகில் உள்ள 150 கோடி மாணவர்களின் கல்வி முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் தாக்கம் அவர்களின் அறிவு நலனில் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த லாக்டவுன் வேளையில் பல வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிறார்கள் மீதான வன்முறை என்பது அவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடர் உலகளவில் நிகழுவும் சிறார் மரணத்தை மேலும் அதிகரிக்கும் என்ற பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் குழந்தைகள் நலன் கேள்விக்குறியைச் சந்தித்துள்ளது. ஏற்கனவே குழந்தைகள் மேம்பாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள் பின்தங்கியுள்ளது. தற்போதைய சூழல் அதை மேலும் மோசமாக்கியுள்ளது.
தற்காலிகமாக ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து குழந்தைகளும் அத்தியாவசிய தேவைகள் உறுதிப்படுத்தப்பட சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணையும் தருணம் இது. குறிப்பாக புலம் பெயர்ந்தோர், குடியேறியவர்கள், அகதிகள், சேரி பகுதிகளில் வசிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் காக்கப்படவேண்டும்.
அத்துடன் தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நலன் பாதுகாக்கப்பட வேண்டும்", எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் உள்ள 4 கோடி குழந்தைகள் லாக்டவுனால் பாதிப்பு - யுனிசெப் அமைப்பு தகவல்