கரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும், அதன் மையப் பகுதியாக தற்போது ஐரோப்பா நாடுகளும், அமெரிக்காவும் மாறிவிட்டன. அதிலும், சமீப நாள்களாக அமெரிக்காவில் இதன் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் புதிதாக 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேசமயம், நேற்று ஒரே நாளில் 1,528 இறப்புகள் பதிவாகியுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,105ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம்தான் கரோனாவால் படுமோசமான விளைவுகளைச் சந்தித்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில் இதுவரை 1,89,020 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9385 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நியூயார்க்கிற்கு அடுத்தப்படியாக நியூ ஜெர்சியில்தான் அதிகமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை 61,850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2350 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரோனா வைரஸ் தொற்றால், தனது நெருங்கிய நண்பர் கோமாவிற்குச் சென்றதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நியூயார்க் நகரத்தின் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஸ்டான்லி செரா கரோனாவால் கோமாவிற்குச் சென்று, தனது 77ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்குக் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, கடந்த மார்ச் 24அன்று நியூயார்க்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவரது உடல்நலத்தில் எந்த ஒரு முன்னேற்றம் அடையாததால், இவர் கோமாவிற்குச் சென்றார். ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், 2016 முதல் 2019 வரை ட்ரம்பிற்கு, 4,02,800 அமெரிக்க டாலர்கள் வழங்கி நிதியுதவி செய்துள்ளார். இதன்மூலம், ட்ரம்ப் தனது நண்பர் கோமாவிற்குச் சென்றார் என்பதை ஸ்டான்லி செராவைதான் குறிப்பிட்டுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
முன்னதாக, ட்ரம்பிற்கு இரண்டு முறை கரோனா பரிசோதனை செய்யப்பட்டும், அவருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்ததாக வெள்ளி மாளிகை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' குறித்து அறிவோம்!