கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. உலகளவில் இந்த வைரஸால் இதுவரை 16 லடசத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,904 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16, 672ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,720 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 4,65,750ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், உலகளவில் உயிரிழப்புகள், பாதிப்புகளில் அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது.
இதனிடையே, அந்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் இதன் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் நகரங்களில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் பொருளாதார தலைநகராக விளங்கும் நியூயார்க்கில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 518 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அதன் மொத்த எண்ணிக்கை 4,778ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, நேற்று ஒருநாளில் 7,521 பேருக்கு இந்த கரோனா நோய் பரவியதன் மூலம், நியூயார்க்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,725ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கரோனாவால் அந்நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் 16 மில்லியன் பேர்( ஒரு கோடியே 60 லட்சம்) வேலை வாய்ப்பு இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பை விமர்சிக்கும் ட்ரம்ப்