இந்தியா - சீன பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடந்த மே மாதம் முதலே எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து எல்லையில் நிலைமை மேலும் சிக்கலானது. இந்நிலையில், கிழக்கு லடாக் கல்வான் பகுதியில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று என அமெரிக்க அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உயர்மட்ட குழு வெளியிட்ட அறிக்கையில், "ஜப்பான், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை சீனா பல்வேறு ரீதியாக அச்சுறுத்தியுள்ளது. மற்ற நாடுகளின் ராணுவ வீரர்கள், துணை ராணுவ படைகளுடன் மோதல் போக்கை கடைபிடித்துவந்துள்ளது. அதேபோல், ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதல் திட்டமிடப்பட்ட ஒன்று" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க, சீன பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான மதிப்பாய்வு ஆணையம் வெளியிட்ட அந்த அறிக்கையில், "உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் சீனா திட்டமிட்ட மோதலை மேற்கொண்டுள்ளது. எல்லைப் பகுதியில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு படைகளை பயன்படுத்த சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கல்வான் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
சீனாவின் நோக்கம் எல்லை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வது என்றால், கல்வான மோதலை அது வெற்றியாகவே கருதலாம். ஆனால், எல்லைப்பகுதிகளில் கட்டுமானங்கள் கட்டும் இந்தியாவின் முயற்சியை தடுத்து நிறுத்துவது என்றால், அதனை சீனா பயனற்றதாக கருத வேண்டும் என அமெரிக்க ஆய்வு குழுவான புருக்கிங்ஸ் நிறுவனத்தின் உறுப்பினர் தன்வி மதன் கூறியுள்ளார். சீனா திட்டமிட்டு தாக்கியதற்கு ஆதாரங்கள் உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.