நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்ட முன்னாள் வெளியுரவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ உள்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்கள், சீனாவின் முக்கிய பகுதிகளான ஹாங்காங், மக்காவோவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதிவியேற்ற அடுத்த நாள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான பணிகளில் மைக் பாம்பியோ உள்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர். எனவே, அவர்கள் சீனாவின் முக்கிய பகுதிகளான ஹாங்காங், மக்காவோவுக்கு நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
இதுமட்டுமின்றி, அவர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களும் சீனாவில் வணிக ரிதியான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாக்க சீன அரசாங்கம் உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.