ஒட்டாவா: கடந்த மாதம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கரோனா வைரஸை எதிர்கொள்ள கனடாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்ய தயாராக உள்ளது. முதல்கட்டமாக ஐந்து லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று கனடாவிற்கு இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசிகளின் ஐந்து லட்சம் டோஸ்களை வழங்கியது.
இதுகுறித்து கனடா பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " கனடாவில் தற்போது கரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. முதல் தவணையாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் ஐந்து லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. எங்களுடனான இந்தியாவின் ஒத்துழைப்பிற்கு நன்றி.
இந்த வாரம் மேலும் 9 லட்சத்து 44 ஆயிரத்து,600 டோஸ் கரோனா தடுப்பூசிகள் கனடாவை அடையும். அவற்றில் 4 லட்சத்து 44 ஆயிரத்து ,600 டோஸ்கள் ஃபைசர் மற்றும் ஐந்து லட்சம் டோஸ்கள் அஸ்ட்ராஜெனெகா உடையது. இதனை சாத்தியப்படுத்திய இந்தியாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்தியாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட கனடா பிரதமர், உலக நாடுகள் கரோனா வைரஸிலிருந்து மீளும் நிலை வந்தால் அவற்றில் நிச்சயம் இந்தியாவின் பங்கு இருக்கும். கரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தியப் பிரதமர் மோடிக்கு எங்களது நன்றி எனக் கூறினார்.