அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் 77 வயதான முன்னாள் அதிபர் ஜோ பிடன், ட்ரம்பை எதிர்த்து களமிறங்கவுள்ளார்.
சமீபத்தில்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான கமலா ஹாரிஸ், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று ஜனநாயகக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று இந்திய - அமெரிக்கர்களுக்கான முக்கியக் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டது.
இந்திய - அமெரிக்கர்களுக்கு என்று பிரத்யேமாக ஜனநாயகக் கட்சி சார்பில் கொள்கை ஆவணம் வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.
தற்போதுவரை, அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடனே முன்னணியில் உள்ளார். இருப்பினும், இழுப்பறியில் உள்ள எட்டு மாகாணங்களில் உள்ள அமெரிக்க இந்திய வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்தக் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. இழுப்பறியில் உள்ள எட்டு மாகாணங்களில் மட்டும் 13 லட்சம் அமெரிக்க - இந்தியர்கள் வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொள்கை ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது என்ன?
இது குறித்து பிடனின் பரப்புரை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குடும்ப ஒற்றுமையை பாதுகாப்பதே எங்களது முக்கியக் கொள்கை. எனவே, குடும்பங்களாக குடியேறுவோரை நாங்கள் ஆதரிப்போம்.
நிரந்தர, வேலை அடிப்படையிலான குடியேற்றத்திற்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது, தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றுடன் விசா முறையை சீர்திருத்தும் நடவடிக்கைகளுக்கும் பிடன் ஆதரவு அளிப்பார்.
அதேபோல, நாடு வாரியாக க்ரீன் கார்டு வழங்கும் நடைமுறை முற்றிலும் நீக்கப்படும். பல இந்தியக் குடும்பங்களை இந்த நடைமுறைதான் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கிறது. ஹெச்1 பி விசா நடைமுறைகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்படும். இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்து, சீக்கியம், இஸ்லாம், ஜெயின் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த அமெரிக்க-இந்தியர்கள் மீதான வெறுப்புவாத பேச்சுக்களும், குற்றங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற மத ரீதியான வெறுப்புவாத பேச்சுகளைக் கட்டுப்படுத்த சட்டத் துறை தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவின் பலமே மற்ற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள்தான். ஆனால், ட்ரம்ப் அரசு குடியேற்றத்திற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிடன் அதிபராகும்போது, குடியேற்றத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதேபோல, நாட்டில் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாஸ்க்குகளை கட்டயமாக்க வேண்டும் - அமெரிக்க அதிபர் வேட்பாளர்