கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஊரடங்கு காலத்தில் திட்டமிடப்பட்ட பல்வேறு திருமணங்களும் ஒத்தி வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் நியூ ஜெர்சியைச் சேர்ந்த டேனியல் கார்டாக்சோ - ரியான் சிக்னரல்லா இணை எளிமையாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் பேசுகையில், '' நாங்கள் இருவரும் எங்களின் 5 வயது முதலே பென்னிசில்வேனியாவில் வசித்து வருகிறோம். ஆனால் எங்கள் நகரத்திலிருந்து 100 கி.மீ., தள்ளி உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் பகுதியில் தான் நாங்கள் திருமணம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது.
அந்தப் பகுதிகளிலும் பொது இடங்களில் எங்களால் திருமணம் செய்ய முடியாத நிலை இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் ஒருவரின் உதவியால் அவரின் வீட்டில் அமைந்துள்ள வாயில் முகப்பின் புல்வெளியில் திருமணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க வேண்டிய திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என முடிவெடுத்தோம். இந்த முடிவை எடுக்க எங்களுக்கு சில வாரங்கள் பிடித்தது.
திருமணத்திற்கு முன்னால் வரை, எங்கள் திருமணம் இப்படி நடக்கக் கூடாது என நினைத்தோம். ஆனால், திருமணம் நடக்கும் இடத்தை அடைந்தபோது எங்களின் உறவினர்களும், நண்பர்களும் எங்களுக்காக வந்தனர். நாங்கள் எப்படி எங்கள் திருமணம் நடக்க வேண்டும் என நினைத்தோமோ அதனைவிட சிறப்பாக நடந்தது. அந்த நாளை எப்போதும் மறக்க மாட்டேன்'' என்றார்.
கரோனா வைரஸால் அமெரிக்க மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், இந்த தம்பதியினரின் திருமணம் பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் மகளுக்கு கரோனா?