அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
தேர்தல் நடைபெற இன்னும் 10க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில் இரு கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தலைமை அலுவலர் மார்க் ஷார்ட், ஆலோசகர் மார்டி ஒப்ஸ்ட் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, பென்ஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த மேலும் மூன்று பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பென்ஸுடன் தொடர்பில் இருந்தவர்களில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
வரும் நாள்களில் பென்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் மேலும் சிலருக்கும் கரோனா உறுதி செய்யப்படட்டால் அது பெரும்சிக்கலை உருவாக்கும் என்ற துணை அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துணை அதிபர் பென்ஸின் அலுவலகத்தில் இதுவரை மொத்தம் எத்தனை பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு துணை அதிபர் அலுவலகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ட்ரம்ப் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நண்பர்களை இப்படியா விமர்சிப்பார்கள்? - இந்தியா குறித்த ட்ரம்பின் பேச்சுக்கு பிடன் பதிலடி