அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் எலியா கம்மிங்ஸ் என்ற ஆப்பிரிக்கா அமெரிக்க அரசியல்வாதியைப் பற்றிக் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சனிக்கிழமை ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று எலியா கம்மிங்ஸ் பற்றி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அதில், "பால்டிமோர் மாவட்டத்தை முறையாக நிர்வகிக்காமல் அம்மாவட்ட மக்களையும் மாவட்டத்தையும் எலியா கம்மிங்ஸ் நாசம் செய்துள்ளார். அவர் செய்த தவறைக் கூறுவதால் ஒருவர் இனவெறியுள்ள நபர் ஆக மாட்டார்" என கூறியுள்ளார்.
மேலும், " மற்றவர்களை இனவெறியுள்ள நபர்கள் எனக் கூறுவதற்குச் செலவிட்ட சக்தியைத் திறமையற்ற எலியா கம்மிங்ஸ் தனது மாவட்டத்தை முன்னேற்ற உபயோகித்திருக்க வேண்டும். அமெரிக்க வரலாற்றிலேயே எனது ஆட்சியின் கீழ்தான் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே எலியா கம்மிங்ஸ் எனக்கு நன்றிதான் கூறவேண்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.