சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திவிட்ட காரணத்தால், அந்நாட்டின் வடக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது படையினரைத் திரும்பப் பெறுகிறோம் என்றும், தங்களிடத்தை துருக்கிப் படைகள் நிரப்புவார்கள் என்றும் அமெரிக்க அரசு நேற்று அறிவித்தது.
தங்களைப் பயங்கரவாதிகள் என்று கருதும் துருக்கி அரசு அதனுடைய படையை சிரியாவுக்கு அனுப்பினால், தங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதென குர்து போராளிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடனான சண்டையில் அமெரிக்கப் படைகளுக்கு பெரிதும் உதவியவர்கள் குர்து போராளிகள்.
இந்நிலையில், குர்து போராளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நேற்று ட்வீட் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சிரியாவில் துருக்கி அரசு வரம்பை மீறி செயல்பட்டால் அந்நாட்டின் பொருளாதாரத்தை உருத்தெரியாமல்அழித்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
மிரட்டல்களால் துருக்கியை ஒன்றும் செய்யமுடியாது
இதற்குப் பதிலளித்த துருக்கி துணை அதிபர் ஃபவுட் ஒக்டாய், "உலகத்துக்கு நாங்கள் சொல்ல நினைப்பது இதுதான், மிரட்டல்களால் துருக்கியை ஒன்றும் செய்யமுடியாது. துருக்கியின் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை நாங்களே தீர்மானிக்க வேண்டும்.
துருக்கியின் எல்லைப் பாதுகாப்பு, சிரிய தோழர்களின் எதிர்காலம் ஆகியவற்றை பொருத்தவரை எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளமாட்டோம்" என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குர்து பேராளிகளைக் கைவிடவில்லை
இதையடுத்து தற்போது ட்விட்டர் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "சிரியாவை விட்டு அமெரிக்கா விலகிச் சென்றாலும், குர்து பேராளிகளை நாங்கள் கைவிடவில்லை. அதேபோன்று துருக்கியுடனான எங்களது நட்புறவும் நீடித்துவருகிறது" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை வெளியேற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முடிவுக்கு அவரது ஆதரவாளர்களே விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பூஜை போட்டு ரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்!