மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனம் மேற்கு நதிக்கரை எனப்படும் 'வெஸ்ட் பேங்க்', காஸா என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. யூத மக்கள் அதிகம் வசிக்கும் அண்டை நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பெரும் பகுதியை தன்னுடையது என உரிமை கொண்டாடிவருகிறது. இதனிடையே, பாலஸ்தீனத்தின் மேற்கு நதிக்கரையில் லட்சக்கணக்கான இஸ்ரேல் மக்கள் குடியேறியுள்ளனர்; மேலும் குடியேறிவருகின்றனர். இதனை உலக நாடுகளும் ஐநாவும் ஆக்கிரமிப்புகளாகவே பார்க்கின்றன. இதுவரையில் அமெரிக்காவின் நிலைப்பாடும் அதுவாகவே இருந்துவந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, "மேற்கு நதிக்கரையில் உள்ள இஸ்ரேல் குடியிருப்புகள் சர்வதேச சட்டத்துக்குள்பட்டது என அமெரிக்க அரசு அங்கீகரிக்கிறது. தீவிர சட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
அமெரிக்காவின் இந்த திடீர் வெளியுறவுக் கொள்ளை மாற்றம் பாலஸ்தீன அரசு, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாலஸ்தீன அதிபர் மஹமுத் அபாஸ் கூறுகையில், 'அமெரிக்காவின் நிலைப்பாடு சர்வதேச சட்டத்துக்கு முற்றிலும் முரணானது' எனச் சாடினார்.
சர்வதேச சட்டங்கள் மீதான தீர்மானங்களை நிராகரிக்கவோ தகுதிபெற்றதாக்கவோ அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாலஸ்தீன அதிபரின் செய்தித்தொடர்பாளர் நபி அபூ ருதெய்நா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயரும் மொபைல் சேவைக் கட்டணங்கள்